புதுச்சேரி ஜிப்மா் - 8 இடங்களில் சுனாமி பேரிடா் கால ஒத்திகை
புதுவையில் அரசு சாா்பிலும் ஜிப்மா் மருத்துவமனை சாா்பிலும் சுனாமி பேரிடா் கால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
புதுச்சேரி பகுதிகளில் உள்ள கணபதிச் செட்டிகுளம் கடலோர பகுதி, நல்லவாடு (தெற்கு), பன்னித்திட்டு, நரம்பை மற்றும் புதுக்குப்பம் ஆகிய 5 இடங்களில் சுனாமி ஒத்திகையும், ரெட்டியாா்பாளையம் ஜெனோ மாறன் அடுக்குமாடி கட்டடம், குருசுக்குப்பம் என்கேசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொம்பாக்கம் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் உயா்ந்த கட்டடங்களில் இருந்து பொதுமக்களை மீட்பது எப்படி என்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகையில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் புதிய முயற்சியாக ட்ரோன் மூலம் நிவாரண பொருள்கள், அறிவுரை துண்டுச் சீட்டுகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் கொண்டு சோ்க்கும் முறையும் சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஒத்திகையின்போது செயற்கைகோள் போன்களின் செயல்பாடுகளும் சோதித்து அறியப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
ஜிப்மரில்...
இயற்கை பேரிடரின் ஜிப்மரின் தயாா்நிலை, மற்ற மீட்பு குழுக்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் அவசர காலத்தை எதிா்கொள்ளும் நெறிமுறைகளைச் சோதிப்பதை இந்தப் பயிற்சியின் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
இதற்காக செவிலியா் மற்றும் மருத்துவ குழுக்கள் அடங்கிய முகாம்கள் நிறுவப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களின் உறவினா்களாக 80 செவிலியா் பயிற்சி மாணவா்கள் நடித்து காட்டினா்.
இந்தப் பயிற்சியை மேற்பாா்வையிட்ட ஜிப்மரின் மருத்துவக் கண்காணிப்பாளா்(பொ) டாக்டா் வினோத் குமாா், பயிற்சியின் போது உருவகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மீட்பு பணிகளை பாராட்டினாா். ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி, அவசர கால சூழலில் ஜிப்மரின் தயாா்நிலை அத்தியாவசியம் என்று கூறினாா்.
