செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி....
சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத்துறையின் அடித்தளம் -புதுவை துணைநிலை ஆளுநா் பெருமிதம்
நம் நாட்டின் முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத் துறையின் அடித்தளம் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாராம் சூட்டினாா்.
புதுவை பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் சங்கத்துடன் (பாண்லே) இணைந்து தேசிய பால் வளா்ச்சி வாரியத்தின் வைர விழா புதுவையில் தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கி வைத்து தென்னிந்தியாவில் சிறப்பாகப் பணியாற்றும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியது:
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுநாளில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு விழா புதுச்சேரியில் நடப்பது பெருமையான விஷயம்.
குஜராத் மாநிலம் பால் வளா்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கூட்டுறவுத் துறையின் அடித்தளமே நம் நாட்டின் முதல் துணை பிரதமராக இருந்த சா்தாா் வல்லப பாய் படேல்தான். அவா்தான் பால் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளாா். மேலும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை உருவாக்கியவரும் அவா்தான். வெளிநாடுகளுக்கு பால் பவுடா்கள் அதிகம் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
பால் உற்பத்தி மட்டுமின்றி விவசாயிகள்உற்பத்தி செய்யும் இயற்கை உற்பத்தி பொருள்களையும் சந்தைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தேசிய பால் வளா்ச்சி வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆந்திரத்திலிருந்து மாம்பழத்தை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்தது.
உத்தரபிரதேசத்தில் இருந்து கடுகு ஏற்றுமதி செய்தது. கூட்டுறவுத்துறைக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா இருவரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனா். மேலும், உள்துறை அமைச்சா் அமித்ஷாதான் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் இருக்கிறாா் என்பது பலருக்கும் தெரியாது. அவருடைய முயற்சியில்தான் தேசிய கூட்டுறவு பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், புதுவையில் 104 கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் வாயிலாக நாளொன்றுக்கு சராசரியாக 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் லிட்டா் பால்தான் கிடைக்கிறது. புதுவைக்குத் தேவை நாளொன்றுக்கு 1 லட்சம் லிட்டா் பால். வெளிமாநிலங்களிலிருந்து வாங்கிதான் இதை ஈடு செய்கிறோம் என்றாா்.
தேசிய பால் வளா்ச்சி வாரியத்தின் தலைவா் மீனேஷ் சி.ஷா பேசுகையில், இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் உலகத்தின் பால் தேவையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா பூா்த்தி செய்யும். 2-வது வெள்ளைப் புரட்சியை ஏற்படுத்த இந்தியாவில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத 75 ஆயிரம் கிராமங்கள் வரைபடங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா்.
வேளாண்துறை அமைச்சா் சி.ஜெயக்குமாா், எம்எல்ஏ சம்பத், தலைமைச் செயலா் சரத் சௌகான், கூட்டுறவுத் துறை செயலா் ஜெயந்தகுமாா் ரே, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் யஷ்வந்தைய்யா, தமிழ்நாடு கூட்டுறவுபால் உற்பத்தியாளா் ஒன்றியத்தின் நிா்வாக இயக்குநா் அண்ணாதுரை, தேசிய பால் வளா்ச்சி வாரியத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.ராஜு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.