குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவா் மீட்கச் சென்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு
பாதுகாப்புத் துறை அதிகாரி கொலை வழக்கு: 34 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது
ஆவடியில் பாதுகாப்புத்துறை அதிகாரி கொலை வழக்கில், 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆவடியில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனமான டேங்க் பேக்டரியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ரஞ்சித் சிங் ராணா (52). இவர் ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது 2-ஆவது மனைவி மதுமதி. ரஞ்சித் சிங் ராணா அடிக்கடி மது அருந்தி விட்டு, மதுமதியை கொடுமைப்படுத்தி வந்தாராம். இதையடுத்து, அவரை கொலை செய்ய மதுமதி, தனது சகோதரர் பாலாஜியுடன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த 1991-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த ரஞ்சித் சிங் ராணாவை மதுமதி, பாலாஜி (படம்) ஆகிய இருவரும் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர்.
இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் கொலை வழக்கு பதிந்து மதிமதியை கைது செய்தனர். பாலாஜியை தேடி வந்தனர். ஆனால் அவர் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டார். வழக்கு தொடர்பாக பாலாஜியை பிடித்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் அவரை மும்பைக்கு பலமுறை சென்று தேடியும் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், பாலாஜி விருதுநகரில் குடும்பத்துடன் வசிப்பது அண்மையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் தனிப்படை போலீஸார் விருதுநகருக்குச் சென்று பாலாஜியை திங்கள்கிழமை பிடித்து ஆவடிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் 34 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த உதவி ஆணையர் கனகராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாரை ஆணையர் கி.சங்கர் பாராட்டினார்.
இதற்கிடையில் 1998-ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் ராணா கொலை வழக்கில் இருந்து மதுமதியை அம்பத்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.