பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!
கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் இருந்த ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே கடந்தாண்டு அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் பொறுப்பேற்ற நிலையில், கொலைக்கு காரணமான 23 பேரை இதுவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, ஸீஷான் சித்திக்கையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், தாவூத் இப்ராஹிம் தலைமையிலான டி கம்பெனி எனப்படும் கும்பலிடம் இருந்து ஸீஷான் சித்திக்கிற்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில், “பாபா சித்திக் கொலையின் பின்னணியில் பிஸ்னோய் குழுவினர் இருப்பதாக பொய்ச் செய்தி பரப்பப்பட்டது வருத்தமளிக்கிறது. உங்களின் குடும்பத்தை எதுவும் செய்யாமல் இருக்க ரூ. 10 கோடியை இரண்டு நாள்களுக்குள் அளிக்க வேண்டும்.
தயவுசெய்து காவல்துறையிடம் செல்ல வேண்டாம். நீங்களும் கொலை செய்யப்படலாம். கவனமாக இருங்கள். ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் கேட்கலாம். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். நேரம் மற்றும் இடத்தை அனுப்புகிறோம். உங்களின் பதிலை தெரியப்படுத்தவும், இப்படிக்கு டி கம்பெனி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து நினைவூட்டல் மின்னஞ்சல் வந்த நிலையில், காவல்துறையில் ஸீஷான் சித்திக் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
உலக அளவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தாவூத்தை அமெரிக்காவின் எஃப்பிஐ, இந்திய காவல்துறை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.