Ace: "ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ருக்கிறேன்" - விஜய் சேதுபதி குற...
பாப்பான்விடுதியில் ஜல்லிக்கட்டு: 43 போ் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 43 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்துமுனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 742 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை குழுக்களாக களமிறக்கப்பட்ட 212 மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் அடக்கினா்.
போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 43 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த 10 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.