``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்க...
பாம்பன் மீனவருக்கு ஜாக்பாட் : இரண்டு `கூறல்’ மீன்கள், ரூ.2.60 லச்சத்துக்கு ஏலம் - என்ன காரணம்?
பாம்பன் தென்கடல் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பினர். தெற்குவாடி மீன் இறங்கு தளத்திற்கு வந்த படகுகளின் ஒரு மீனவரின் படகில் பிடிபட்ட மீன்களை வலையில் இருந்து எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அதில் சீலா, பாறை, கட்டா, மாவுலா, விலை மீன், நண்டு உள்ளிட்ட மீன்களுடன் அரிய வகை மீனான 'கூறல்' என்ற மீனும் சிக்கியிருந்தது.

இதையடுத்து அந்த இரண்டு கூறல் மீன்களையும் எடை போட்டு பார்த்த போது அதில் ஒரு மீன் 21 கிலோ எடையும் மற்றொரு மீன் 29 கிலோ எடையும் கொண்டிருந்தது. அந்த மீன்களை பொது ஏலத்தில் விட்ட போது அவற்றை வாங்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஏலத்தின் இறுதியில் 21 கிலோ எடை கொண்ட மீனை ரூ.1.10 லட்சத்திற்கும், 29 கிலோ எடை கொண்ட மீனை ரூ. 1.51 லட்சத்திற்கும் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்தார்.
இந்த மீனின் குடல் பகுதியில் உள்ள பண்ணா (டியூப்) போன்ற பகுதி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படும் என்பதால் இந்த அளவிற்கு விலை போவதாக கூறும் மீனவர்கள், 4 ஆண்டுகளுக்கு பிறகு அதிக எடை கொண்ட இந்த கூறல் மீன் சிக்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினர்.

கூறல் மீன்கள்
இந்த அரிய வகை மீன் குறித்து நம்மிடம் பேசிய பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி. ராயப்பன், ''பொதுவாக கூறல் மீன்கள் சேரு எனப்படும் சகதி நிறைந்த குடா பகுதிகளிலேயே காணப்படும். இலங்கை கடல் பரப்பில் கோபுர தீவு என்ற பகுதியில் இவை அதிகளவில் இருக்கின்றன. இதே போல் இந்திய கடல் பரப்பில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம், பாசி பட்டினம் ஆகிய பகுதிகளில் வளர்கின்றன. இந்த மீன் சாப்பிட ருசியாக இருக்கும் அதே வேளையில் இதன் குடல் பகுதியில் உள்ள பண்ணா எனப்படும் டியூப் போன்ற பகுதி அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்களில் ஒன்றாக உள்ளது. அறுவை சிகிச்சையின் போது உடலில் எடுக்கப்படும் தோல் பகுதிகளுக்கு மாற்றாகவும், காயத்திற்கு போடும் தையலுக்கு பயன்படும் நரம்பாகவும் இது பயன்படுவதாக கூறுகின்றனர்.
இந்த கூறல் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் அதனை முழுதாகவோ அல்லது வயிற்று பகுதியில் உள்ள அந்த டியூப்பினை மட்டும் தனியாக எடுத்தோ வெயிலில் காய வைக்கின்றனர். பின்னர் அதனை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த மீனின் அளவு கூட கூட விலையும் அதற்கு தகுந்தாற் போல் அதிகரிக்கும். ஒரு மீன் 10 கிலோ எடைக்கு அதிகமாக இருந்தால் லட்சகணக்கில் விலை போகும்.

வழக்கமாக சின்ன அளவிலான கூறல் மீன்களே பிடிபடும். எப்போதாவதுதான் பெரிய அளவிலான எடை கொண்ட கூறல் மீன் வலையில் சிக்கும். முன்பெல்லாம் இந்த மீனின் மதிப்பு தெரியாமல் கழிவை போன்று வீசி விடுவோம். அப்படியே விலை போனாலும் கிலோ 5 ரூபாய்க்கு கூட விலை போகாது. தற்போதைய அறிவியல் வளர்ச்சியல் இந்த மீன் இப்போது அரியவகை மீனாக மாறிவிட்டதுடன் அதிகமான தொகைக்கும் விலை போகிறது’’ என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
