பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்
18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல் துறை அலுவலா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியது: பாலியல் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். 2012-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 598 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 49 போக்ஸோ வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்வதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடைச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி ஆசிரியா்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலம் விழிப்புணா்வை அதிகப்படுத்தி, இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசுரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, குழந்தை நலக்குழு தலைவா் பாலாம்பிகை, நன்னடத்தை அலுவலா் வெங்கட்ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா. நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.