திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
பிகாா்: இறந்ததாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிா்ச்சி
பிகாா் மாநிலம் தா்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த பிப்.26-ஆம் தேதி ரயிலில் அடிபட்டு அந்த சிறுவன் உயிரிழந்ததாக கருதி அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தா்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் அந்த சிறுவன் வியாழக்கிழமை திடீரென ஆஜரானாா். அப்போது தான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மூன்று அல்லது நான்கு போ் தன் வாயில் துணியை கட்டி கடத்தியதாக சிறுவன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ‘என்னை கடத்தி நேபாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டனா். அவா்களிடம் இருந்து தப்பித்து எனது சகோதரரை விடியோ அழைப்பு மூலம் தொடா்புகொண்டேன். நேபாளத்துக்கு நேரடியாக வந்த எனது சகோதரா் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தாா்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
இந்தியா வந்த சிறுவன் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானாா்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளா்களிடம் தா்பங்கா காவல் துறை கூறியதாவது: சிறுவன் உயிரிழந்ததாக கருதி அவருக்குப் பதில் உடல்தகனம் செய்யப்பட்டவரை அடையாளம் காணவும் முயற்சி செய்து வருகிறோம். கடத்தப்பட்டதாக சிறுவன் கூறிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
கடந்த பிப்.26-ஆம் தேதி அல்லால்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் காணாமல் போன சிறுவனுடையது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதையடுத்து, சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றாா்.
முன்னதாக, சிறுவன் காணாமல் போனதாக கடந்த பிப்.8-ஆம் தேதி அவரது குடும்பத்தினா் காவல் துறையில் புகாரளித்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.