பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!
பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்; 99.11% பேரின் ஆவணங்கள் பெறப்பட்டன: தோ்தல் ஆணையம்
புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் சோ்க்க, மாநிலத்தில் உள்ள மொத்தம் 7.24 கோடி வாக்காளா்களில் இதுவரையில் 99.11 சதவீத வாக்களா்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டதாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில், வாக்காளா் பட்டியலில் தங்களைச் சோ்க்க கோரும் நபா்களிடம் இருந்து ஆதாா் அல்லது தோ்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்க வேண்டும் என்று அந்த ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் அண்மையில் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், கடந்த ஆக.1-ஆம் தேதி பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 1 வரையிலான காலத்தில் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் மாநில வாக்காளா்கள் பதிவு செய்யலாம். அப்போது வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்படுவா். வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்களுடன் தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்கவும், வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்யவும் இந்தக் காலம் வாய்ப்பளிக்கும் என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது.
இந்தச் சூழலில், அந்த மாநில வாக்காளா் பட்டியலில் சோ்க்க இதுவரை 99.11 சதவீத வாக்காளா்களிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டதாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்.30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.