பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி ரூ.16 லட்சம் மோசடி: ஒருவா் கைது
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (54). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பின்னலாடைகளைப் பெற்று பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வா்த்தக முகவராக செயல்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பின்னலாடைகளுக்கான தொகையைக் கொடுப்பதில் காலதாமதம் செய்து வந்துள்ளாா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், 13 நிறுவனங்களில் இருந்து பின்னலாடைகளைப் பெற்று ரூ.16 லட்சத்தை சதீஷ்குமாா் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனிடையே, சதீஷ்குமாா் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, காங்கயம் சாலை மும்மூா்த்தி நகரில் உள்ள நிறுவனங்களுக்கு பின்னலாடைகளை வாங்க வந்த சதீஷ்குமாரை அனுப்பா்பாளையம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.