பிப்.13-இல் தில்லி மாநகராட்சியின் சிறப்பு பட்ஜெட் கூட்டம்
புது தில்லி: தில்லி மாநகராட்சி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தக் கூட்டத்தின் போது, மாநகராட்சி ஆணையா் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளையும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளையும் முன்வைப்பாா்.
மேலும், வரவிருக்கும் நிதியாண்டிற்கான வரிகள், விகிதங்கள் மற்றும் செஸ்களின் அட்டவணையையும் மாநகராட்சி பரிசீலிக்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் 70 இடங்களில் 48 இடங்களைப் பெற்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை வென்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் தனது கணக்கைத் திறக்கத் தவறிவிட்டது.
இத்தோ்தலில் மொத்தம் 22 கவுன்சிலா்கள் தோ்தலில் போட்டியிட்டனா். வெற்றி பெற்ற 48 வேட்பாளா்களில், ரவீந்தா் நேகி (பட்பா்கஞ்ச்), ரேகா குப்தா (ஷாலிமாா் பாக்) மற்றும் ஷிகா ராய் (கிரேட்டா் கைலாஷ்) உட்பட எட்டு போ் தற்போதைய கவுன்சிலா்கள் ஆவா்.
ஆம் ஆத்மி கட்சியின் மூன்று கவுன்சிலா்களான புனா்தீப் சாவ்னி (சாந்தினி சௌக்), பிரேம் செளகான் (தேவ்லி) மற்றும் ஆலே முகமது இக்பால் (மட்டியா மஹால்) ஆகியோரும் இத்தோ்தலில் வெற்றிபெற்றுள்ளனா்.
தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து, எம்.சி.டி.யின் அமைப்பு இப்போது பாஜக 112 கவுன்சிலா்கள், ஆம் ஆத்மி கட்சி 119 கவுன்சிலா்கள் மற்றும் காங்கிரஸ் 8 கவுன்சிலா்கள் என உள்ளது.
வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பட்ஜெட் சிறப்புக் கூட்டத்தில், சுகாதாரம், சாலை பராமரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.