பிப். 4 முதல் 14 வரை மருதமலையில் தைப்பூச திருத்தேர் திருவிழா!
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நாள்களில் மலை மேல் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகம் செய்வதற்குத் தடை விதிக்கப்படுவதாகவும் ஜமாப், கொட்டும் முரசு, தாரை தப்பட்டை போன்றவற்றை அடிவாரம் வரை மட்டுமே வாசிக்க வேண்டும் எனவும் மலைக் கோயிலில் வாசிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெறும் நாளில் மூலவருக்கு உபயதாரர் அபிஷேகம் கிடையாது. எனவும் இந்த நாள்களில் சிறப்பு அலங்காரத்துடன் மூலவர் காட்சி அளிப்பார் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இக்கோயிலில் ரூ. 250 செலுத்திப் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் அர்ச்சனை செய்து அந்த முகவரிக்கு ஓராண்டிற்குத் தபாலில் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். தங்க ரத புறப்பாடு தினம்தோறும் 6 மணிக்கு நடைபெறும். அதில் ரூ.2000 செலுத்தி விரும்பும் நாளில் தங்கரதம் புறப்பாடு செய்யலாம். அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் விரும்பும் நாளில் ரூ.1,500 அலுவலகத்தில் செலுத்தி அபிஷேகம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் 2 லட்சம் செலுத்தினால் அதிலிருந்து பெறப்படும் வட்டி தொகையைக் கொண்டு வருடத்திற்கு ஒரு நாள் விரும்பும் தேதியில் விரும்பும் பெயரில் பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படும் எனவும் பக்தர்கள் அவர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் மற்றும் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்திற்கு நாளொன்றுக்கு 52,500 செலுத்தியும் நிரந்தர கட்டளை பெயரில் ரூ 9 லட்சம் செலுத்தியும் பங்கேற்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கோயிலின் வரலாறு பூஜை நேரங்கள் கட்டண விவரங்கள் நன்கொடை செலுத்தும் வசதி பக்தர்களுக்கான வசதி ஆகியவற்றை "திருக்கோயில்" எனும் மொபைல் போன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.