பிரசவமும் பெண்ணுறுப்பில் சில மாற்றங்களும்... நிபுணர் வழிகாட்டல்! | காமத்துக்கு மரியாதை - 247
பிரசவத்திற்குப் பிறகு பெண்ணுறுப்பு என்பது பழைய நிலையிலேயே இருக்க முடியாது. சில மாற்றங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதற்கு ஏற்றபடி, எப்போது, எப்படி தாம்பத்திய உறவுகொள்ள வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா இங்கே சில தகவல்களைப் பகிர்கிறார்.

''சுகப்பிரசவம் நல்லது. ஆனால், சுகப்பிரசவத்தின்போது பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்தால் அது ஆறுகிறவரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும்.
சிசேரியன் மூலமாக பிரசவம் நடந்திருந்தால், தையல்போட்ட இடம் ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும். தவிர, ஒருசில மாதங்கள்வரை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் உறவுகொள்வது நல்லது.
குழந்தை பெரிதாக இருந்து, சுகப்பிரசவமாகியிருந்தால் பிறப்புறுப்பு தளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, வாக்குவம், ஃபோர்செப்ஸ் என்று உபகரணங்கள் உதவியுடன் சுகப்பிரசவம் நடந்திருந்தாலோ, பிறப்புறுப்பில் அதிக தையல்கள் போட்டிருந்தாலோ பிறப்புறுப்பு தளர்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், உறவுகொள்ளும்போது முன்பிருந்த இறுக்கம் கிடைக்காமல் போகலாம். இது இயல்பான ஒன்றுதான்.
சிசேரியன் செய்தாலுமே ஹார்மோன் மாற்றங்களால் பிறப்புறுப்பில் சில மாறுதல்கள் ஏற்படவே செய்யும். இதனாலும் தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, 'பிரசவத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவில் திருப்தியில்லை' என்பதை உணர்கிற பெண்களும், அதை வெளிப்படையாகச் சொல்கிற பெண்களும் குறைவு. அபூர்வமாக சில பெண்கள் அப்படிச் சொன்னால், அந்த இடத்து தசையை இறுக்கமாக்கும் கெகல் பயிற்சி செய்ய வேண்டும். கெகல் பயிற்சி என்பது, பிறப்புறுப்பை இறுக்கமாக்கி, தளர்த்துகிற ஒரு பயிற்சி. இந்தப் பயிற்சியை ஏதாவது வேலை செய்யும்போதுகூட செய்யலாம். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவர பிறப்புறுப்பு இறுக்கமாகும். கூடவே, தாம்பத்திய உறவிலும் திருப்தி கிடைக்கும்.
சில பெண்களுக்குத் தும்மினால், இருமினால் சிறுநீர் கசியும். இதற்கும், குழந்தை பெரிதாக இருப்பதும் உபகரணங்கள் பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதும்தான் காரணங்கள். இப்படிப்பட்டவர்களை, அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சிறுநீரை அடக்கி வைத்து, பிறகு வெளியேற்றச் சொல்வோம். இந்தப் பயிற்சியிலேயே பிரச்னை சரியாகிவிடும். சரியாகவில்லை என்றால், சிறுநீர்ப்பையைச் சற்று மேலே ஏற்றித் தைக்கிற அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்போம்.
சிலருக்கு பிறப்புறுப்பு வழியாக காற்று வருவதாகச் சொல்வார்கள். பிரசவத்துக்குப் பிறகு வயிறு தளர்வதுதான் இதற்குக் காரணம். குழந்தை பிறந்து கர்ப்பப்பை சுருங்கியவுடன், அதுவரை ஒதுங்கியிருந்த குடல்பகுதி மறுபடியும் அதனுடைய இடத்துக்கு வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வயிற்றைத் தொட்டால் சத்தம் வருவதுபோல இருக்கும். இதைத்தான் 'காத்து வயித்துக்குள்ள போயிடுச்சு' என்கிறார்கள். உடற்பயிற்சி செய்து வயிறு உள்நோக்கிச் சென்றாலே, இது சரியாகிவிடும். குழந்தை பிறந்தவுடனே தாயின் வயிற்றுக்குள் காற்று போய்விடுமென துணியால் வயிற்றை இறுக்கிக் கட்டுற பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. இதனால், குடல் திரும்ப தன்னுடைய இடத்துக்கு வருவதற்கு வழியில்லாமல் மேல் நோக்கி நகர ஆரம்பிக்கும். விளைவு, நெஞ்சடைப்பதுபோல இருக்கும்... கவனம்'' என்று எச்சரிக்கிறார் டாக்டர் விஜயா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...