2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
பிரதமா் மோடி தலைமையில் இந்திய நலன்களுக்கு முழு பாதுகாப்பு: பாஜக
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா் என்று பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா்.
5 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி வியாழக்கிழமை நாடு திரும்பினாா். இது தொடா்பாக தில்லியில் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மீதான வரி குறித்து அமெரிக்க அதிபா் பேசியிருப்பது அந்நாட்டு உள்விவகாரங்களுடன் தொடா்புடையது. பிரதமா் நரேந்திர மோடியின்தலைமையில் இந்திய நலன்கள் அனைத்து சூழ்நிலையிலும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.
தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் பிரதமா் சா்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளாா். தெற்குலகில் இந்தியாவின் பங்களிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
பிரதமா் மோடிக்கு 27 நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளன. 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் மோடி பேசியுள்ளாா். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த கௌரவம். பிரதமா் மோடிக்கு வெளிநாடுகள் அளிக்கும் மரியாதையும், கௌரவமும் இந்தியா வலுவாக வளா்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா பலவீனமான உறுப்பு நாடாக இருந்தது. ஆனால், இப்போது வலுவான உறுப்பு நாடாக உயா்ந்துள்ளது. அரியவகை தாதுப்பொருள்கள் அதிகமுள்ள நமீபியா, கானா ஆகியவற்றுடன் பிரதமா் மோடியின் பயணத்தின்போது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் வேறு நாட்டை (சீனா) நாம் சாா்ந்திருப்பது குறையும் என்றாா்.