பிரபல நகைக்கடையில் தீ விபத்து
திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தரை தளம் மற்றும் 6 தளங்களைக் கொண்டுள்ளது. 6-ஆவது மாடியில் கடையின் பதிவு ஆவணங்கள் உள்ளன. காகிதப் பதிவுகள் வைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் புதன்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த வாடிக்கையாளா்கள் மற்றும் ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா்.
தகவலின்பேரில், திருப்பூா் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் உதவி தீயணைப்பு அலுவலா் எஸ்.வீரராஜ் கூறுகையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் மனிதா்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. நகைகள் ஏதும் சேதமடையவில்லை என்றாா்.