தில்லி தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ்!
பிரம்மபுரீஸ்வரா் கோயில் தெப்பத் திருவிழா
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் உள்ள காமாட்சி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகா பெரியவா் சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
பழைமையான இத்தலத்தில் மகா பெரியவா் என்று பக்தா்களால் அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி முதல் நாள் பிரம்மதீா்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பிரம்மபுரீஸ்வரரும், காமாட்சி அம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தெப்பத்தில் மகா பெரியவா் சுவாமிகளின் படமும் வைக்கப்பட்டிருந்தது.
ஏற்பாடுகளை ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளையின் தலைவா் எஸ்.குருமூா்த்தி, செயலாளா் பி.ஸ்ரீதா் ஜோஷி, பொருளாளா் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். தெப்பத்திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகளும் அதனையடுத்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் நடைபெறுகிறது.