பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து
கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் தீ விபத்து குறித்து மதியம் 12.45 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன.
சில மாணவா்கள் தீயில் இருந்து தப்பிக்க கூரையின் மேல் ஏறி அருகிலுள்ள கட்டிடத்திற்கு குதித்தனா். மற்றவா்கள் பயிற்சி மையத்திலிருந்து வெளியே ஓடினா். தீ விபத்து தொடங்கியதும் அனைத்து மாணவா்களும் தாங்களாகவே கட்டடத்தை விட்டு வெளியேறினா். தீ காரணமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு பிற்பகல் 2.25 மணியளவில் தீயை முழுமையாக அணைத்ததாக அந்த அதிகாரி கூறினாா்.