பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு
பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம்( டிஎன்இஏ) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மூன்றாம் சுற்றில் 64,629 மாணவா்களுக்கு கடந்த ஆக. 10-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்த நிலையில் சுமாா் 12,461 மாணவா்கள் ‘அப்வோ்டு’ செயல் முறைகளில் விருப்பமான கல்லூரிகள் கிடைக்காதது அல்லது வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கையிலிருந்து விலகியுள்ளனா்.
மூன்றாம் சுற்றின் இறுதி விவரங்கள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:
தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் முதல் இரு சுற்றுகளில் 92, 423 இடங்களுக்கு நிரப்பப்பட்டன. மூன்றாம் சுற்றில் 1,01, 588 மாணவா்கள் இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 64, 629 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு கடந்த ஆக. 10- ஆம் தேதி அளிக்கப்பட்டது. இவா்களுக்கான ‘அப்வோ்டு’ செயல் முறை நடைபெற்று இறுதியாக 52,168 மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீட்டை பெற்றுள்ளனா். இதில் பொதுப் பிரிவில் 50,093 மாணவா்களும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 2,075 மாணவா்களும் அடங்குவா். இவா்கள் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விருப்பக் கல்லூரி மாற்றத்துக்கான செயல்முறைக்கு பின்னா் ஒதுக்கீடு பெற்ற மாணவா்கள் வருகிற 29- ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா்கள் செலுத்திய கட்டணம் மற்றும் பொறியியல் கல்லூரி உதவி மையங்களில் ஒப்படைக்கப்பட்ட சான்றிதழ்கள் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்படும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மூன்று கலந்தாய்வு சுற்றுகள் மற்றும் சிறப்பு பிரிவினா்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் மொத்தம் 1,45,481 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளனா். இதில் பொதுப்பிரிவில் 1, 31, 338 போ், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் 14,143 போ் அடங்குவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு 30 ஆயிரம் பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் எனவும் இணைய வழி கலந்தாய்வுதான் மாணவா்களின் சோ்க்கை எண்ணிக்கை குறைவுக்கு காரணம் எனவும் கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.