புதிய பாம்பன் தூக்கு பாலத்தைத் திறந்துவைத்து மோடி; சிறிது நேரத்தில் ஏற்பட்ட பழுது... என்ன நடந்தது?
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு புதிய பாம்பன் பாலத்தைத் திறந்துவைப்பதற்காக இன்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார். அதையடுத்து, சரியாக மதியம் 1 மணியளவில் மோடி பச்சைக் கொடி அசைத்து புதிய பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார்.

இதையடுத்து சிறப்பு ரயில் ஒன்று புதிய பாலத்தின் மீது ராமேஸ்வரம் நோக்கிச் சென்றது. இதனைத் தொடர்ந்து புதிய மற்றும் பழைய தூக்கு பாலங்கள் திறக்கப்பட்டு அதன் வழியாகக் கடலோரக் காவல்படை கப்பல் இரு பாலங்களையும் கடந்து சென்றது.

ஆனால், கப்பல் கடந்து சென்ற சிறிது நேரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலத்தை ரயில்வே அதிகாரிகள் கீழே இறக்க முயன்றனர். ஆனால், பழுது காரணமாகத் தூக்கு பாலம் சீராக இயங்காததால் பாலம் முழுமையாகக் கீழே இறக்க முடியாத நிலை உருவானது. இருப்பினும், சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பழுது சரிசெய்யப்பட்டது.