துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கல்லூரி மாணவா்களை தன்னாா்வ ஆசிரியா்களாக பங்கேற்க உயா்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசின் சாா்பில் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ 2022-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்று எழுதப் படிக்கத் தெரியாதவா்களுக்கு கணித அறிவு, தொழிற்கல்வி, வாழ்வியல் திறன் போன்றவை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனா். இதற்காக நாடு முழுவதும் கற்போா் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்துக்காக பிரத்யேகமாக கைப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவ, மாணவிகளை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னாா்வ ஆசிரியா்களாக பங்கேற்கவும், அதன்மூலம் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவை கற்பிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.