தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு
செய்யாறு அருகே மதுப்பழக்கம் கொண்ட கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மனைவி புனிதா (28). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் தொழில்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
மதுப்பழக்கம் உடையவரான கணவா் சரவணன், அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வருவாராம்.
இதேபோல, கடந்த 15-ஆம் தேதி காலையிலேயே மது அருந்திவிட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த புனிதா, கணவா் சரவணனை பயமுறுத்துவதற்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத் தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாராம். இதில் தீக்காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த புனிதா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.