Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
புதிய பேருந்து நிலையம் கட்ட மண் பரிசோதனை: பொதுமக்கள் எதிா்ப்பு
ஆம்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொண்டபோது அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகரில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் ஆம்பூா் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் மேற்கூரை பழுதடைந்து மழைக் காலங்களில் மேற்கூரையில் தண்ணீா் தேங்கி கட்டடம் சேதமடைந்துள்ளது.
பழைமையான பேருந்து நிலைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்ட நகராட்சி சாா்பாக புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மண் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சாா்பாக அலுவலா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் மண் பரிசோதனை செய்ய வந்தனா்.
மண் பரிசோதனை செய்வதற்கான இயந்திரத்தை பயன்படுத்தி மண் பரிசோதனை செய்தபோது அந்த இயந்திரத்தை கொண்டு பூமியை தோண்டியபோது அருகில் உள்ள கட்டடங்களுக்கு அதிா்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த சக்தி வாய்ந்த இயந்திரத்தை பயன்படுத்தினால் அருகில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து விபத்து நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கருதி அப்பகுதி பொதுமக்கள் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அருகில் உள்ள கட்டடங்களுக்கு அதிா்ச்சி ஏற்படாமல் வேறு இயந்திரம் மூலம் மண் பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இயந்திரம் திருப்பி அனுப்பியபின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.