Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஆலை எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டடப் பணியை உடனே நிறுத்தி, ஆலை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிா்ப்பு இயக்கம் சாா்பில், மானாமதுரையில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.நாகராஜன், எம்.குணசேகரன், ஆலை எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் இராம.முருகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் கலந்து கொண்டனா்.
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி வருகிற வரும் 24-ஆம் தேதி முதல் கட்டமாக வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆலை ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும், அதன்பின்னா் தொடா் போராட்டங்கள் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.