புதிய 15 கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உயா்கல்வி அமைச்சா் உத்தரவு
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 15 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உத்தரவிட்டாா்.
தமிழக உயா்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் கோவி.செழியன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
இதில், பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது; உயா்கல்வியில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளின் முன்னேற்றம்; தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 15 கல்லூரிகள், தற்காலிக கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவுபடுத்துவது; சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் ஆய்வு செய்தாா்.
இந்த கூட்டத்தில் உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் ஏ.சுந்தரவல்லி, தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், தலைமை பொறியாளா் வெ.சுகுமாறன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் ஜே. பிரகாஷ், சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.