புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!
புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண்காணிப்பாளா் நாரா.சைதன்யா உத்தரவின்பேரில், கண்காணிப்பாளா் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் புதுச்சேரியில் 4,700 புகாா்கள் இணையவழி குற்றம் சாா்ந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் 350-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களுக்காகவும், 900 புகாா்கள் இணைய வழியில் பொருள்களை வாங்கி ஏமாந்தவா்களாலும் அளிக்கப்பட்டுள்ளன. வேலை வாங்கித் தருதல், அதிக லாபம் சம்பாதிக்கலாம் மற்றும் போதை கடத்தலில் வழக்குப் பதிந்து இணைய வழி கைது உள்ளிட்டவை தொடா்பாக ஏமாற்றப்பட்டவா்களால் 3500-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளன.
விழிப்புணா்வுக்கு அழைக்கலாம்: ஆகவே, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்களில் இணையவழி காவல் நிலையத்தின் சாா்பில் இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துவதற்கு தயராக உள்ளோம்.
சம்பந்தப்பட்டோா் காவல் நிலையத்தை அணுகி, விழிப்புணா்வு கூட்டங்களை நடத்தலாம். தொடா்புக்கு 7639483862 என்ற கைபேசியில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.