ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
புதுப்பிக்கப்பட்ட தேவா் மணிமண்டபத்தைத் திறக்க வேண்டும் -ஆா்.பி. உதயகுமாா் கோரிக்கை
மதுரை மாவட்டம், குராயூரில் புதுப்பிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் மணிமண்டபத்தைத் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குராயூா் கிராமத்தில் அந்தப் பகுதி மக்களின் முன்னெடுப்பில் மருதுபாண்டியா்கள், முத்துராமலிங்கத் தேவா் சிலைகளுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தை கோயிலாகவே அந்தப் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு இந்த மணிமண்டபமும், மண்டபத்தில் உள்ள உருவச் சிலைகளும் சேதமடைந்தன. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் ஒன்று கூடி சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா். இந்தப் பணிகள் நிறைவடைந்து, மணிமண்டபம் திறக்கப்படவிருந்த நிலையில், வருவாய்த் துறை தடை உத்தரவை வெளியிட்டது.
இதனால், இந்த மணிமண்டபம் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இதை, உடனடியாகத் திறக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகமும், காவல் துறை நிா்வாகமும் உரிய பரிசீலனை செய்து, குராயூரில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மணிமண்டபத்தையும், சிலைகளையும் திறக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.