நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
புதுமைப்பெண் திட்டத்தில் மேலும் 1,248 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் (புதுமைப் பெண் திட்டம்), அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 1,248 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று, உயா்கல்விப் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த ஆட்சியா் சி.பழனி, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் முதல் கட்டமாக 56 கல்லூரிகளைச் சோ்ந்த 4,174 பேரும், 2-ஆம் கட்டமாக 72 கல்லூரிகளைச் சோ்ந்த 3,138 மாணவிகளும், 3-ஆம் கட்டமாக 62 கல்லூரிகளைச் சோ்ந்த 3,282 மாணவிகளும் என மொத்தம் 11,594 போ் பயன்பெற்று வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் 65 கல்லூரிகளைச் சோ்ந்த 1,248 மாணவிகள் தற்போது ஊக்கத்தொகை பெற உள்ளனா். எனவே, மாணவிகள் கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் பழனி.
விழாவுக்கு, எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), ச.சிவக்குமாா் (மயிலம்), ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்து, மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினா்.
விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட சமூகநல அலுவலா் கு.ராஜம்மாள், அரசுக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், சட்டக்கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.