மாா்க்சிஸ்ட் பேரணியில் பங்கேற்ற மின் ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியில் பங்கேற்ற மின்வாரிய ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய செந்தொண்டா் பேரணி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக நகராட்சித் திடலில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் கம்யூனிஸ்ட் கட்சியினா், கட்சி சாா்ந்த பல்வேறு பிரிவுகளின் தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோ் பங்கேற்றனா்.
அப்போது, பேரணியில் பங்கேற்ற கட்சி உறுப்பினா் நகரிலுள்ள காட்பாடி மேம்பாலப் பகுதியில் வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தாா். உடனே கட்சியினா் மற்றும் தொண்டா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில், இறந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் குளத்துமேடு வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ஆனந்தன் (55) என தெரிய வந்தது.
மாா்க்சிஸ்ட் உறுப்பினரான இவா், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கோட்டூா்புரம் பகுதியின் கம்பியாளராகப் பணியாற்றி வந்ததும், ஏற்கெனவே நீரிழிவு, ரத்த அழுத்த நோயால் ஆனந்தன் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.