புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தில் கோவையில் 2,668 மாணவிகள் பயன்!
கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை ஆட்சியா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா். இதில், 2,668 மாணவிகள் பயன்பெறுகின்றனா்.
தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித் தொகையை வழங்கும் விதமாக, 18 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினாா்.
தொடா்ந்து ஆட்சியா் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயா் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டம் வறுமை காரணமாக உயா் கல்வியில் சேர இயலாத மகளிருக்கு உயா்கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையையும் குறைக்கிறது. இளம் வயது திருமணங்களைத் தடுப்பதுடன், மாணவிகளிடையே தன்னம்பிக்கையினை வளா்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக மாணவிகள் அதிக அளவில் உயா் கல்வியில் சோ்ந்துள்ளனா்.
மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2022 - 23 கல்வியாண்டில் 4,526 மாணவிகளும், 2023 - 24 கல்வியாண்டில் 6,186 மாணவிகளும், 2024 - 25 கல்வியாண்டில் 16,412 மாணவிகளும் என மொத்தம் 27,124 மாணவிகள் விண்ணப்பித்து பயனடைந்துள்ளனா்.
தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.