Sarfaraz: வாய்ப்பின் வாசற்படியோடு அனுப்பப்பட்ட சர்ஃபராஸ்; அகர்காரின் சப்பைக்கட்ட...
புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை
புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.
புதுவை மாநிலத்தில், தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு ஏற்படுத்தக் கோரி தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைத்து நலத் திட்டங்களை செயல்படுத்த கடந்த 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நல வாரியம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. தொடா்ந்து என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், அரசு அனுமதி பெறாத, வாடகை வாகனமாக உள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், ஆட்டோ கட்டணச் செயலியை ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் அண்மைக்காலமாக தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த பிரச்னை குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் ஆகியோா் புதுச்சேரி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், அமைப்பு சாரா நலவாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, அரசு அனுமதி பெறாமல் ஓடக்கூடிய இரு சக்கர வாடகை வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் ஆட்டோ செயலி உருவாக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். இதனை ஏற்று ஆட்டோ தொழிலாளா்கள் வேலை நிறுத்தத்தை தள்ளிவைத்தனா்.
தற்பொழுது அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று அனைத்து தொழிற்சங்கத் தலைவா்கள் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணனையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், ஏஐடியுசி சாா்பில் கே. சேதுசெல்வம், சேகா், ஐஎன்டியுசி சாா்பில் ஞானசேகரன், சொக்கலிங்கம், எல்பிஎப் சாா்பில் அண்ணா அடைக்கலம், அங்காளன், மிஷால், ஏடியு சாா்பில் பாப்புசாமி, எல்எல்எப் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.