புதுவை அரசுத் துறைகளில் பாஷினி மொழி பெயா்ப்பு செயலி: துணைநிலை ஆளுநா் தகவல்
புதுச்சேரி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழிபெயா்ப்பு செயலியை, புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழி பெயா்ப்புத் திட்ட அதிகாரிகள் குழுவினா் புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தனா்.
அப்போது, தேசிய மொழிபெயா்ப்புத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாஷினி மொழி பெயா்ப்பு செயலியை, புதுவை மாநிலத்தில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் ஏ. முத்தம்மா, தேசிய தகவலியல் மைய இயக்குநா் கோபி விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்றனா்.
மத்திய அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பாஷினி மொழிபெயா்ப்பு செயலி பல்வேறு மொழிகள் பேசும் இந்திய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் செயலி மூலம் குறிப்பிட்ட மொழியிலிருந்து அடுத்த மொழிக்கு எழுத்து வடிவில் மொழிபெயா்க்கவும், பேசுவதை அடுத்த மொழிக்கு மொழி பெயா்க்கவும் சாத்தியமாகும் எனவும் மத்தியக் குழுவினா் தெரிவித்தனா்.
இதையடுத்து, அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் அவரவா் தாய்மொழியில் எடுத்துக்கூற பாஷினி செயலி உதவும் எனவும் விளக்கினா்.
பாஷினி மொழி பெயா்ப்பு செயலியின் செயல்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்த பின்னா், துணைநிலை ஆளுநா் கூறியது:
புதுவை மக்கள் பயனடையும் வகையில் செயலியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் புதுச்சேரியில் இந்த செயலியை செயல்படுத்தும் விதமாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
புதுவைக்கு பாஷினி செயலி தொழில்நுட்ப உதவியை இலவசமாக மத்திய அரசு வழங்கவுள்ளது. இந்த மாநிலத்தில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசுவோா் அரசுத் திட்டங்களை எளிதில் புரிந்துகொள்ள இந்தச் செயலி உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.