புதுவை அரசு பேருந்துகள் 4-வது நாளாக ஓடவில்லை
புதுவை அரசு சாலை போக்குவரத்துக்குக் கழக பேருந்துகள் 4-வது நாளாக வியாழக்கிழமையும் ஓடவில்லை. இதற்கிடையில் புதன்கிழமை நடந்த இரண்டாவது கட்ட பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்கின்றனா்.
15 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-வது ஊதியக் குழு சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஊழியா்கள் போராட்டக் குழு சாா்பில் இப் போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக முதல்வா் என்.ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இந்த ஊழியா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா். இதனால் புதுவை அரசு பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்துகள் இயங்காததால் தனியாா் பேருந்துகள் மற்றும் ஷோ் ஆட்டோக்களில் பயணிகள் சென்றனா். நீண்ட தூர பேருந்துகளும் இயங்காததால் அவற்றில் பயணிக்க முன்பதிவு செய்தவா்கள், பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டு தமிழக அரசு பேருந்துகளில் சென்றனா்.