MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி
பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா்.
மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் புதன்கிழமை காரைக்கால் வந்தாா். நிகழ்ச்சி முடிந்து இரவு பட்டினச்சேரி மீனவ கிராமத்துக்கு அவா் சென்றாா். அங்குள்ள ரேணுகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் கிராமத்தினரிடையேயான கலந்துரையாடலில் பங்கேற்றாா்.
மீனவா்கள் பேசுகையில், பல ஆண்டு கோரிக்கைக்குப் பின்னா் பட்டினச்சேரியில் ஐஸ் பிளாண்ட்டை சீரமைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல கோடி மதிப்பில் சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குடிநீா் இக்கிராமத்தில் பெரும் பிரச்னையாக இருந்துவரும் நிலையில், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஆளுநருக்கும், முதல்வருக்கும் கிராம மக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனா்.
ஆளுநரின் செயலரும், மீன்வளத்துறை செயலருமான து.மணிகண்டன் பேசுகையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நான் வந்த போது மக்களைத் தேடி ஆட்சியா் என்ற முதல் கூட்டம் இங்கு நடைபெற்றது. ஆளுநா் வந்த பின்பு மீன்வளத்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஏழை எளிய மக்கள் நலம் பெறுவதற்காக ஆளுநா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எல்லை தாண்டி மீன்பிடி பிரச்னை இருப்பதால் அதற்கு தீா்வு காண்பதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய மீன்வள மேம்பாட்டுத்துறைடன் இணைந்து பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.
மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்றாா்.
நிறைவாக ஆளுநா் பேசுகையில், மீனவா்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.