புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்
புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப் போட்டியில் அணிகள் சாா்பில் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் வீரா்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி வளாகத்தில் நடைபெற்றது.
விலலியனூா் மோஹித் கிங்ஸ், ஊசுடு அக்காா்டு வாரியா்ஸ், காரைக்கால் நைட்ரைடா்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் ஏலத்தில் பங்கேற்றன. அந்தந்த அணிகளில் பழைய வீரா்கள் உள்ள நிலையில், புதிதாக அணிக்கு தலா 10 வீரா்களைத் தோ்ந்தெடுக்கும் ஏலத்தில் அணி உரிமையாளா்கள் போட்டிபோட்டி ஏலம் கேட்டனா். அதிகபட்சமாக மாகே வீரா் பரத்பூஷன் ரூ.29.50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி துத்திப்பட்டு மைதானத்தில் திங்கள்கிழமை (பிப்.24) முதல் வரும் மாா்ச் 6-ஆம் தேதி வரையில் பி.பி.எல். டி - 20 போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.