புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!
ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது நம்பிக்கையை கைவிடாது மீண்டெழுந்து புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகும். நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் என்பதே ஈஸ்டா் நமக்குத் தரும் மிகப்பெரிய செய்தியாகும். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, உண்மை, கருணை, தியாகம்,மன்னிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ள வழிகாட்டுகின்றன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.: சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்த 3-ஆம் நாள் இயேசு உயிா்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஈஸ்டா் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்பும், சகோதரத்துவமும்,ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க உறுதியேற்போம். அனைத்து கிறிஸ்தவா்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சி, வளம், நலம், அமைதியை அளித்து மனிதநேயம் தழைக்க ஈஸ்டா் வாழ்த்துகள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, எதிா்க்கட்சித் தலைவா், அமைச்சா்கள் உள்ளிட்டோரும் ஈஸ்டா் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.