பாகிஸ்தான் அமைதியான நாடு; இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது: பிரதமர் ஷெபாஸ...
`புளி அதிகம் சாப்பிட்டால் ரத்தம் சுண்டிவிடுமா?' - மருத்துவ உலகம் சொல்வதென்ன?
தென்னிந்திய உணவுகளில் புளியின் பங்கு இன்றியமையாதது. சாம்பார் முதல் மீன் குழும்பு வரை புளி சேர்க்காமல் பெரும்பாலும் உணவுகளை சமைக்க மாட்டார்கள். இப்படி புளி அதிகம் சேர்த்த ரசம், சாம்பார், மீன்குழம்புகளுக்கு என உணவுப்பிரியர்களிடயே தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இப்படி தனக்கென தனி ஃபேன் ஃபாலோயர்ஸை புளிசேர்த்த உணவுகள் கூட்டிக்கொண்டே இருக்க, அது உடலுக்கு நல்லது இல்லை என பேச்சும் ஒருபக்கம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
இன்றளவும் பலரது வீடுகளில் புளியை சாப்பிடும் குழந்தைகளிடம், ‘புளி அதிகம் சாப்பிடாதே, அதிக புளி சாப்பிட்டால் உடம்பில் இருக்கும் ரத்தமெல்லாம் சுண்டிப் போய்விடும்’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஏன், நாமுமே கேட்டிருப்போம்.
’காட்டில் புலியும், வீட்டில் புளியும் ஆளைக்கொள்ளும்’ என்னும் பழமொழியெல்லாம் ஃபேமஸ் ஆன ஒன்றுதான்.
சரி, புளி சாப்பிட்டால் மருத்துவரீதியாக உண்மையிலேயே ரத்தம் சுண்டி விடுமா..? புளி சாப்பிட்டுவதால் அப்படி என்னத்தான் நடக்கிறது மனித உடலில் என்பதை விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் பா.தமிழ்க்கனி.

சித்த மருத்துவம், மனிதன் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு போன்ற அறுசுவை உணவையும் உட்கொள்ள வேண்டும் என்றே குறிப்பிடுகிறது. இதில் கசப்பு , துவர்ப்பு சுவை உணவுகளை நாம் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. அவற்றையும் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பும் புளியும் பத்தியத்திற்கு ஆகாது என சொல்வார்கள்.
காரணம், மருந்துகளை உட்கொள்ளும்போது இவற்றை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படும் என்பதுதான். ஆனால், சித்த மருத்துவ முறையில் புளி சாப்பிடுவதால் ரத்தம் சுண்டிப்போகும் என்று இதுவரை எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், புளியை அதிகம் சாப்பிடுவதால் பாண்டு, சோபை ஏற்படும் என குறிப்பு இருக்கிறது.
நவீன மருத்துவத்தில் புளியை ’Blood thinner’ என குறிப்பிடுகின்றனர். Blood thinner என்பது ரத்தம் உறையும் திறனைக் குறைப்பது.
பாண்டு என்றால் ரத்தசோகையை (Anemia) குறிக்கும். புளி அதிக அளவில் அமிலத்தன்மையை கொண்டது. அதை அதிகளவில் சாப்பிடும்போது நமது வயிற்றுப்பகுதியில் புண் ஏற்படும். உணவு செரிமானம் பாதிக்கப்படும். இயல்பான PH அளவு மாறுபட்டு அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால், இரைப்பையிலிருந்து ஊட்டச்சத்துக்கள் ரத்தத்திற்கு உறிஞ்சப்படுவது தடைபடும். இதனால் ரத்தசோகை ஏற்படும்.
நவீன மருத்துவத்தில் புளியை ’Blood thinner’ என குறிப்பிடுகின்றனர். Blood thinner என்பது ரத்தம் உறையும் திறனைக் குறைப்பது. ஏற்கனவே ரத்தப்போக்கு பிரச்னை உள்ளவர்கள் அதிகளவு புளியை எடுத்துக்கொண்டால் அந்தப் பிரச்னை இன்னும் அதிகமாகும். இந்தக் காரணங்களைத்தான் ரத்தம் சுண்டிவிடும் என்ற பொருள்பட சொல்லப்பட்டிருக்கலாமே தவிர, ரத்தத்தின் அளவே குறைந்து விடும் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்காது.

அதற்காக புளியே சாப்பிடகூடாதா என்றால், தென்னிந்திய உணவுப்பழக்கங்களில் உள்ளது போன்று சிறிதளவு புளி சேர்த்து சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் வராது. காரணம் உணவை சமைக்கும்போது புளியுடன் சேர்த்து மிளகு, சீரகம் போன்ற இன்னும் பல உணவுப்பொருள்களையும் சேர்த்தே சமைத்து சாப்பிடுகிறோம். அவை அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தும். வெறும் புளியை அப்படியே அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால்தான் பிரச்னைகள் ஏற்படும். எனவே வெறும் புளியையோ, புளியம்பழத்தையோ அதிகளவு சாப்பிடுபவர்கள் அவற்றை குறைத்துக்கொள்வதே நல்லது’’ என்கிறார் மருத்துவர் பா.தமிழ்க்கனி.