பூங்காவிற்குள் உள்ள குளத்தில் இளைஞா் சடலம்
புது டெல்லி: தில்லியில் ஸ்மாா்டிவன் பூங்காவில் உள்ள குளத்தில் 24 வயது இளைஞா் ஒருவா் இறந்து கிடந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: பூங்காவில் இளைஞா் இறந்த நிலையில் கிடப்பதாக திங்கள்கிழமை காலை 7.38 மணியளவில் பிசிஆா் அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்தை அடைந்த போது, ஸ்மாா்டிவன் பூங்காவில் பாதிக்கப்பட்டவரின் உடல் பகுதியளவு நீரில் மூழ்கியிருப்பதைக் கண்டனா். இறந்தவா் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ராகுல் சிங் பிஷ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
அவரது பணப்பையில் இருந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பான் காா்டு மற்றும் வாக்காளா் அட்டை உள்ளிட்டவை மூலம் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது. அவரிடமிருந்து ஒரு கைப்பேசியும் மீட்கப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில் அவரது தலையின் பின்புறத்தில் இரண்டு மழுங்கிய காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடா்பாக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினாா்.