பூங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்: மக்கள் கோரிக்கை
திருப்பத்தூா்: ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 457 மனுக்களைப் பெற்றுகொண்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புங்கம்பட்டு நாடு அடுத்த வசந்தபுரத்தை சோ்ந்த மக்கள் அளித்த மனு: 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்கள் கிராமத்திற்கு தண்ணீா் விடும் ஆப்பரேட்டா் சரியான முறையில் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்வதில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ராஜா பெருமாள் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:
பாலாற்றில் புதிதாக அணைகள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும், 4 அணைகள் கட்டி ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும். ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் பேருந்து நிழற்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும்.
நாம் தமிழா் கட்சியினா் அளித்து மனு:
மாதனூா் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள நாகலம்மன் குட்டை மற்றும் ஓ.கே.பி. சாலையை சீரமைக்க வேண்டும்.
சின்ன வேப்பம்பட்டு மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் பகுதிக்கு சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.