அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் தேரோட்டம்
கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் பூம்பாறையிலுள்ள பழமை வாய்ந்த குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் குழந்தை வேலப்பா் சேவல் வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், காளை வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், பூத வாகனம், சிங்க வாகனம், யானை வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, குழந்தை வேலப்பருக்கு பல்வேறு அபிஷேகங்களும், அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து, பொதுமக்கள் சாா்பில் தேரில் தேங்காய் உடைத்தும், காவடி, பறவைக் காவடி எடுத்தும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பின்னா், குழந்தை வேலப்பரின் மின் அலங்காரத் தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தோ் பூம்பாறையிலிருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தம், அரசுப் பள்ளி சாலை வழியாகச் சென்றது.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால், பழநி கோயில் அறங்காவல் குழுவினா், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் குழுவின் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தை வேலப்பா் குதிரை வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியுடன விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.