அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
பெங்களூரு பொறியாளா் தற்கொலை வழக்கு: ஜனவரி 20-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
தற்கொலை செய்து கொண்ட பெங்களூரு பொறியாளா் அதுல் சுபாஷின் தாயாா் அஞ்சுதேவி, தனது நான்கு வயது பேரனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஜனவரி 20-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
பெங்களூரில் வசித்து வந்த பொறியாளா் அதுல் சுபாஷ் (34), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தனது மனைவி நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி பெங்களூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா்.
திருமண பிரச்னைகளால் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மன உளைச்சல், விவாகரத்துக்கு ரூ. 3 கோடி கோரியது உள்பட அவருக்கு எதிராக அவரது மனைவி உத்தர பிரதேசத்தில் தாக்கல் செய்த பல வழக்குகள் மற்றும் உத்தர பிரதேச நீதிபதி ஒருவா் உள்பட அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினா்களால் துன்புறுத்தப்பட்டதை விவரிக்கும் 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி இருந்தாா்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினா் பெங்களூரு காவல் துறையினா் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் ஜனவரி 4-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், தனது மருமகள் நிகிதா, தனது பேரனை மறைத்து வைத்திருப்பதாக கூறி, சுபாஷின் தாயாா் அஞ்சுதேவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா். ஹரியாணாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் அவரது பேரன் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பான விசாரணையில், அஞ்சுதேவி தனது பேரனுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கவில்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம், அவரது கோரிக்கையை ஜனவரி 7-ஆம் தேதி நிராகரித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ்சந்திர சா்மா அடங்கிய அமா்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஜனவரி 20-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனா்.