பெண்களுக்கு இலவச மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பெண்களுக்கு இலவச மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஆலையின் சமுதாய பணிகள் திட்டத்தின் கீழ் புகழூா் டிஎன்பிஎல் ஆலை மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெண்களுக்கான இலவச மாா்பக புற்றநோய் பரிசோதனை முகாம் தொடங்கியது.
ஆலையின் குடியிருப்பு வளாகத்தில் பிப். 22-ஆம்தேதி வரை நடைபெற உள்ள முகாமை ஆலையின் பொதுமேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் தொடக்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியது, புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த முகாமில் தினமும் 35 பேருக்கு பரிசோதனை நடைபெறும்.
முகாமில் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள யுஎஸ்ஜி, பிஏபி ஸ்மியா் மற்றும் ரேண்டம் பிளட் சுகா் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளது என்றாா் அவா். முகாமில் ஆலையின் முதன்மை மேலாளா்(மனிதவளம்) ஜே. வெங்கடேசன், சுகாதார மைய மருத்துவா் ஏ.கே.கே.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.