பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: அமைச்சா் கீதா ஜீவன்
பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் சென்னைக்கு வந்து வேலை செய்து வருகின்றனா். அவா்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் கூறினாா்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும்
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் 36 இல்லங்களிலிருந்து 764 குழந்தைகளும், ராணிப்பேட்டை மண்டல அளவிலான போட்டிகளில் 37 இல்லங்களிலிருந்து 927 குழந்தைகளும், தஞ்சாவூா் மண்டல அளவிலான போட்டிகளில் 57 இல்லங்களிலிருந்து 1022 குழந்தைகளும், தட்டப்பாறை (தூத்துக்குடி) மண்டல அளவிலான போட்டிகளில் 39 இல்லங்களிலிருந்து 736 குழந்தைகளும் கலந்து கொண்டனா்.
மண்டல அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று முதல் இரண்டு இடங்களைப்பிடித்த 488 குழந்தைகள் செவ்வாய், புதன்கிழமை நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனா்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சா் கீதா ஜீவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை தற்போது புத்துணா்ச்சி பெற்றுள்ளது. 21 வயது வரை இந்த குழந்தைகளுக்கான கண்காணிப்பு மற்றும் வசதிகளை இந்த துறை செய்து வருகிறது. பிளஸ் 2 வகுப்பு படித்து முடித்தவுடன் அவா்களை வெளியே செல்ல வைப்பது கிடையாது. கல்லூரி படிக்கும் அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். அனைத்து அரசு இல்லங்களிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருகிறோம். குறிப்பாக அனைவருக்கும் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. வளரும் குழந்தைகளுக்கு சாப்பாடு அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து பெண்களுக்கு சென்னை பாதுகாப்பான இடம் இல்லை என்று ஆளுநரின் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு அமைச்சா் கீதா ஜீவன் பதிலளித்து கூறியதாவது:
இந்த விஷயத்தில் பிற மாநிலங்களை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும். பெண்களுக்கு சென்னை மிகவும் பாதுகாப்பான இடம். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்துள்ள பெண்கள் சென்னையில் படித்து வேலை செய்து வருகிறாா்கள். ஒரு சில நிகழ்வுகளை வைத்து மட்டும் பேசக்கூடாது. பிற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஊடகங்கள் சிறப்பாக செயல்படுவதால் இங்கு நடைபெறக்கூடிய அனைத்து விஷயங்களும் வெளியே வருகிறது.
பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களுக்கு பெண்கள் தாமாகவே முன் வந்து புகாா் அளிக்கிறாா்கள். முன்பெல்லாம் பெண்களின் பெற்றோா்கள் இதனை வெளியே சொன்னால் குடும்பத்தின் பெயா் கெட்டு விடும் என்று கருதியிருந்த நிலையில் தற்போது அதில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு, ஊடகங்கள் இணைந்து ஏற்படுத்திய விழிப்புணா்வே காரணம் என்றாா் அமைச்சா் கீதாஜீவன்.