பெண்களை ஆபாசமாக படமெடுத்த இருவா் கைது
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாா் குளியலறையில் சிறிய ரக கேமராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடும் பக்தா்கள் பயன்படுத்தும் வகையில் அந்தப் பகுதியில் தனியாா் குளியலறைகள் உள்ளன.
இதில் ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான குளியலறையை ராஜேஷ்கண்ணன் (36) நடத்தி வருகிறாா். இங்கு மீராமைதீன் (36) என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை ராமேசுவரத்துக்கு வந்த ஒரு குடும்பத்தினா் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடினா். பின்னா், அவா்களது மகள் உடை மாற்றுவதற்காக ராஜேஷ்கண்ணனின் குளியலறைக்குச் சென்றாா். அங்கு ஓா் அறையில் சிறிய ரக கேமராவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தெரிவித்தனா்.
இதன்பேரில், ராஜேஷ்கண்ணன், மீராமைதீன் இருவரையும் போலீஸாா் ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், ராஜேஸ்கண்ணன் அண்மையில் இணையவழியில் சிறிய ரக கேமராவை வாங்கி குளியலறையில் பொருத்தி பெண்களை ஆபாசமாகப் படமெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.