மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு
கமுதி வட்டாரத்தில் விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தில் அதன் கமுதி வட்டாரத் தலைவா் சந்திரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு: கமுதி வட்டாரத்தில் ஏற்கெனவே 61 மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய வட்டாட்சியா், அரசு அதிகாரிகளுக்கு நன்றி. மேலும், நமது வட்டாரத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெறாமல் விடுபட்ட சுமாா் 200 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா்.
இவா்களில் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்க மாவட்ட துணைத் தலைவா் முத்துராமலிங்கம், கமுதி வட்டாரச் செயலா் நீராவிமுருகேசன், பொருளாளா் ஸ்டாலின் நல்லுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.