Thug Life: `` `நாயகன்' படம்தான் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தது!" - மணிரத்னம் ஓப...
பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில், வெள்ளைமாலை வீருமாறம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் குளியல் அறையில் இருந்த பெண்களை இளைஞா்கள் 4 போ் கைப்பேசியில் விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா்களைப் பிடித்து பொதுமக்கள் செம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனா். ஆனால் அவா்களை போலீஸாா் தப்ப விட்டு விட்டனராம். இதனால், ஆத்திரமடைந்த பெண்களும், பொதுமக்களும் சனிக்கிழமை அதிகாலை செம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. காா்த்திகேயன் உள்ளிட்ட போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனா். இதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விழாக் குழுத் தலைவா் திண்டுக்கல் ராமராஜ் செம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த, காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் விஜயபாண்டி ஆகியோா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினா்.
அப்போது செம்பட்டி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த வண்ணப்பட்டியைச் சோ்ந்த ராமா் மகன் கல்லூரி மாணவா் நவீன் (20), இதே ஊரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இவா்களது நண்பா்களான இதே ஊரைச் சோ்ந்த ஹரி, விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனா்.