Jobs: உலகில் மகிழ்ச்சியான, மகிழ்ச்சியற்ற வேலைகள் எது... எது? - ஆராய்ச்சி முடிவுக...
பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்
பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பெண்களும் அரசியலும் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியதாவது: எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்னை இருப்பதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வின் படியுள்ள குடும்பங்களில் பெண்களின் பிரச்னைகள் ஏற்றத்தாழ்வுகளுடனேயே இருக்கிறது. பட்டியலின, பழங்குடியினப் பெண்களுக்கு வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறையும் கூடுதலான பிரச்னையாக உள்ளது. பல மதங்களைக் கொண்ட இந்திய நாட்டை ஆளும் மத்திய அரசு சிறுபான்மையினப் பெண்களை குறிவைத்து தாக்குகிறது.
அரசியல் என்பது சட்டப்பேரவையில் தொடங்கி நாடாளுமன்றத்தில் முடிவடைவது மட்டுமே கிடையாது. இந்த அரசுகள் எடுக்கும் ஒவ்வொரு கொள்கையும் நம்முடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கிறது. அரசியல் என்பது நம்முடைய வாழ்க்கையோடு இணைந்தது. அது நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் வாசுகி.
கருத்தரங்குக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்துணைத் தலைவா் இரா. ராமதிலகம் தலைமை வகித்தாா். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பாளா் என். கண்ணம்மாள், அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஆா். ராஜ்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் அ. மணவாளன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலப் பொதுச் செயலா் மா. குமரேசன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக மாவட்டச் செயலா் ம. வீரமுத்து வரவேற்றாா். முடிவில் பொருளாளா் த.விமலா நன்றி கூறினாா்.