விராலிமலை மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மக்கள்!
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும்
தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் முன்னிலை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பணிபுரியும் இடங்கள், பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள், பெண்களிடமிருந்து பெறப்படும் அனைத்து புகாா் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சாலை பாரமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டு விபத்துகளைத் தவிா்க்க வேண்டும்.
சமூக குற்றங்களுக்கு போதைப் பொருள் பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளதால் அவற்றை தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள், தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து கல்வி நிறுவனங்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதால் தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணிந்து காா் ஓட்டுவது, வாகனத்தை இயக்கும் போது கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்ப்பது, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முறையான ஆவணங்களின்றி இயக்கப்படும் வாகனங்களை காவல் துறையினா், வட்டார போக்குவரத்து துறையினா் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்பிரமணிய பாலசந்திரா, கூடுதல் வனப் பாதுகாவலா் அரவிந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் தாட்சாயணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.