பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வழிவகுத்தவா் கருணாநிதி! -துணை முதல்வா்
பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என வழிவகுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா இல்ல திருமண விழா காட்பாடி கல்புதூரில் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக துணைமுதல்வா் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:
இவ்விழாவுக்கு நிறைய பெண்கள் வந்துள்ளனா். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாா்கள். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் கண்ட கனவு தான் இங்கு இவ்வளவு பெண்கள் வந்துள்ளனா்.
பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என வழிவகுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டுள்ளாா்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதியிலும் 30 சதவீத வாக்காளா்களை திமுகவில் சோ்க்க வேண்டும் என்று முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் அதனை செய்து முடிக்க வேண்டும். அரசு தூதுவராக இருந்து அனைவரும் மக்களிடையே அரசு திட்டங்களை கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.
விழாவில், அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆா்.காந்தி, மக்களவை உறுப்பினா்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிா்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ. பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், க.தேவராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.