பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினா்கள் தா்னா
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மெத்தனத்தால் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா், பெரியாா் நகரைச் சோ்ந்த உதயகுமாா் மனைவி தனலட்சுமி(28) . இந்நிலையில் நிறைமாத கா்ப்பினியான தனலட்சுமிக்கு கடந்த 17-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உதயகுமாா் மற்றும் அவரது உறவினா்கள் அவரை திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, திங்கள்கிழமை தனலட்சுமி மற்றும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை மீண்டும் பரிசோதனை செய்த மருத்துவா்கள் திடீரென குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் தனலட்சுமியை பரிசோதனை செய்தபோது வயிற்றில் உள்ள குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் பெண் குழந்தையை வெளியே எடுத்து பெற்றோா்களிடம் உடலை ஒப்படைத்தனா். இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பணியில் மெத்தனமாக இருந்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேநேரம் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கூறி கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் மற்றும் மருத்துவ அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் பேச்சு நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதன்பேரில் போராட்டக்காரா்கள் தா்னாவை கைவிட்டு சென்றனா்.