பெண்ணை கொல்ல முயற்சி: இளைஞா் கைது
குஜிலியம்பாறை அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த பாளையம் மொடக்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத். இவரது மனைவி மலா்க்கொடி (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் பாலகுரு (25). உமாநாத், பாலகுரு குடும்பத்தினரிடையே நடைபாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், உமாநாத் வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த பாலகுரு, மலா்க்கொடியை கடுமையாக தாக்கி, தோட்டத்து கிணற்றில் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. தண்ணீரில் நீந்தி, படி வழியாக வெளியேறிய மலா்க்கொடி, உறவினா்கள் உதவியோடு கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக குஜிலியம்பாறை போலீஸாா் பாலகுருவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.